புதன், 12 அக்டோபர், 2016

பனி போல் பிணி விலக சூரிய நமஸ்காரம்

முயற்சியின்றி சோம்பலோடு இருக்கிற ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையை விட ஆற்றலோடும், ஆரோக்கியத்தோடும் இருக்க முயற்சி செய்கிற ஒருவருடைய ஒரு நாளைய வாழ்க்கை மேன்மையுடைத்து.
புத்தர்


நம் வாழ்க்கையும், ஆரோக்கியத்தோடு மேன்மையடைவது நமக்கான குறிக்கோள். ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளின் மூலம் தான், ஒரு சமுதாய அமைப்பு உருவாக முடியும். தனி மனிதனின் ஆரோக்கியமான வாழ்க்கை நெறியே, ஆரோக்கியமான சமுதாய அமைப்புக்கு வித்தாகும். ஏதாவது மாயாஜாலம், வித்தை சொல்லித் தரப் போறீங்களான்னு கேட்கிறீங்களா? ஆமாம், சித்த மந்திரங்களுடன், மந்திர வித்தைகளும் தெரிந்து கொள்ளலாம் முறையான பயிற்சிகளுடன், இடைவிடாத பின்பற்றுதல்களுடன்.

சூரிய நமஸ்காரம்...
'இது நமக்கு சரிப்பட்டு வராது... ஒரு குறிப்பிட்ட மக்கள் வெகு சிரத்தையோடு ஆச்சாரமாக செய்வது...' என்று விலகிப் போவது தவறு. முறையாக, சீராக சூரிய நமஸ்காரம் பயிற்சி செய்பவர்களை கூர்ந்து கவனித்துப் பாருங்கள். அவர்களின் நடையை கவனியுங்கள். ஒரு பிரகாசம், ஓர் உணர்வு, ஓர் உயிர்த் துடிப்பு நிச்சயமாகத் தென்படும்.
சூரிய நமஸ்கார பயிற்சி, ஓர் உன்னதமான வரப்பிரசாதம். இதை உதாசீனப்படுத்தாமல் பழகிக் கொள்வது, நம் ஆரோக்கியத்திற்கு உகந்தது. ஆனால், தற்போதைய உலகம், பழமைகளை புறம் தள்ளி வைப்பது வேதனை. 24 மணி நேரத்தில், இரண்டு நிமிடத்திலிருந்து, 20 நிமிடம் வரை, ஒதுக்குவதுக்கு கூட நம்மால் முடியாது என்று கூறினால், ஆரோக்கியம், நலம் எல்லாம் எட்டாக் கனியாகிவிடும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லாரும் செய்யலாம். ஏனென்றால், ஒவ்வொரு மனிதனுக்கும் குறிப்பிட்ட அளவு உணவு, ஓய்வு, உடற்பயிற்சி தினமும் தேவைப்படும் அளவில் இருக்க வேண்டும் என்பது நியதி. இது விஞ்ஞானம், மெய்ஞானம் ஏற்றுக் கொண்ட உண்மை.

உணவு, ஓய்வு சரி... உடற்பயிற்சி?
'நமக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை...' என்று அலட்டாதீர்கள். குறிப்பாக பெண்கள் மனக்கலக்கம், மனதில் படபடப்பு,
நம்பிக்கையின்மை, நரம்பு தளர்ச்சி, விரக்தி போன்ற பல கோளாறுகளையும் விரட்டி சீர் செய்யும் உத்திகளை முதன்மைப்படுத்தி, இயல்பான மனம், அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம் தரும் எளிய, பயனுள்ள பயிற்சிகள் பற்பல உள்ளன; அதில் முதன்மையானது சூரிய நமஸ்காரம்! கண்டிப்பாக, இது ஆன்மிகம் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல!
சூரியனே அனைத்து ஆற்றல்களுக்கும் மூலம். சூரியன் இல்லாவிட்டால், இப்பூவுலகில் வாழ்க்கையே இருக்காது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலேயே, இந்தியர்கள் சூரியனிடமிருந்து ஆற்றல் பெறுவதை, ஒரு விஞ்ஞானமாகவே வளர்த்து வந்துள்ளனர். சூரிய நமஸ்காரம், நிமிர்ந்து, குனிந்து, வளைந்து, படுத்து என, எல்லா நிலைகளிலும் செய்யலாம். மனிதன், செயல்படும்போது மட்டுமே வாழ்கிறான்.

'வைத்தியனுக்கு வேலையில்லை'
காலை, மாலை இரண்டு நேரங்களிலும் செய்வது, உடலுக்கும், மனதுக்கும், உயிருக்கும் நலமளிக்கும். காலை ஆதவனை வரவேற்பவனிடம், ஆரோக்கியம் அள்ள அள்ள குறையாத பொக்கிஷமாக இருக்கும்; இது உறுதி. 'சூரியன் நுழையும் இடத்தில், வைத்தியனுக்கு வேலையில்லை' என, வல்லுனர்கள் சொல்வர்.
முதுமையிலும், இளமையின் துளிர் காண, இப்பயிற்சிகளை எந்த வயதிலும் அருமையாக செய்யலாம். ஒரு நமஸ்காரத்தில்,
12 நிலைகள் உள்ளன. ஆரம்பத்தில், இந்த பயிற்சியை மேற்கொள்வதில் சில சிரமங்கள் இருக்கலாம்; ஒரு வார பயிற்சியில்
சரியாகிவிடும். ஓர் ஆண்டு காலத்தில், உடம்பு துவண்டு இளமை பெறும்.
மோட்டார் பேட்டரியை சார்ஜ் செய்வது போன்று, பிரபஞ்சத்தில் உள்ள பிராண சக்தியை, இதன் மூலம் உடலில் நிரப்பிக் கொள்ளலாம்; 15 நிமிடங்கள் தான் ஆகும். பிராண சக்தியை, போதுமான அளவுக்கு பெருக்கிக் கொள்வதற்காக, இது அதிகம் என, யாரும் நினைக்க மாட்டீர்கள் தானே!
காலையில் சூடான பானங்களை தவிர்த்து, இரண்டு டம்ளர் தண்ணீரை குடித்தாலே, நாம் ஆரோக்கியமாய் வாழலாம். முதலில் 1, 2, 3 என, ஆரம்பித்து, 10, 12 லிருந்து, 20 வரை உயர்த்திக் கொள்ளலாம். இதன் பலன்கள் பற்பல...
தினமும் செய்வதால், ஜீரண மண்டலம் ஆற்றல் பெருகி, செரிமானம் எளிதாகும். வயிற்றுக்குள் இருக்கும், அங்க அவயங்கள், தத்தம் இடத்தில் இருந்து இசைவாகப் பணிபுரியும்.
நுரையீரல்களில், காற்றோட்டம் தாராளமாகிறது. கரிக்காற்றையும், பிற நச்சுப் பொருள்களையும், மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம், சூரிய நமஸ்காரம் உடலுக்கு பெரும் நன்மை விளைவிக்கிறது.
சீரான ரத்த ஓட்டம், இதய துடிப்பு, கை, கால்களுக்கு சூடு, நரம்பு மண்டலத்தை விழிப்புடன் வைத்திருப்பது, வியர்வையை வெளியேற்றுவது, நம் எல்லா உடல் உறுப்புகளும், இந்த பயிற்சியால் பலன் பெறும். கொழுப்பால் உண்டாகியிருக்கும் மடிப்புகள் மறையும். தோல், நுரையீரல், குடல், சிறுநீரகம் முதலிய பகுதிகள் வழியே, சரியாக கழிவுகள் வெளியேறுவதால், உடலில் துர்நாற்றம் ஏற்படுவதில்லை.
இளமை, நலம், அழகு மூன்றும் வேண்டுமானால், இதோ... மார்கழி மாதத்தில் ஆரம்பிப்போம் சூரிய நமஸ்காரத்தை; இனி காலைப் பொழுது சோம்பலைத் தவிர்த்து, இந்த சுலப பயிற்சியால் புத்துணர்வு பெற, சங்கல்பம் எடுப்போம்!

சூரிய நமஸ்காரம் யாரெல்லாம் செய்யலாம்? எங்கு, எப்போது, எப்படி செய்ய ஆரம்பிப்பது? சூரியனை பார்த்துக் கொண்டேதான் செய்யணுமா?
என்ன நாயகியரே... பல கேள்விகள், ஒன்றன் பின் ஒன்றாக நடனமாடுகிறதா? எவ்வளவோ விஷயங்கள் சொன்னோம். அதையும் சொல்லமாட்டோமா?
அடுத்தவாரம் கண்டிப்பாக...

கருத்துகள் இல்லை: