வெள்ளி, 30 செப்டம்பர், 2016

சாபம், பாவம் நீக்கும் திருப்புவனம் பூவனநாதர்!

முன்னோர் சாபத்தாலும், அவர்கள் செய்த பாவத்தாலும் வழிவழியாக அவதிப்படும் குடும்பங்கள் பல இருக்கின்றன. சில குடும்பங்களில், தொடர்ச்சியாக பெண்கள் வாழாமல் போவார்கள். சிலருக்கு செல்வ அபிவிருத்தி இருக்காது. சில வீடுகளில் எதிர்பாராமல் யாருக்கேனும் அகால மரணம் ஏற்படும். இப்படி அவதிப்படுபவர்கள் குடும்பத்துடன் வந்து வழிபட வேண்டிய தலம், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் திருப் பூவனநாதர் கோயில். இங்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால், சாபத்தையும் பாவத்தையும் நீக்கி, குலம் தழைக்கும். 
தல வரலாறு: திருப்புவனத்தில் வசித்த பொன்னனையாள் என்ற நடன மாது தனது கலையால் ஈட்டிய செல்வத்தை, சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வதில் செலவழித்தாள். சிவபக்தையான அவளுக்கு அவ்வூரில் இருந்த பூவனநாதருக்கு சொக்கத்தங்கத்தில் சிலை வடிக்க ஆசை இருந்தது. இவளது ஆசையை நிறைவேற்ற சிவனே சித்தராக மாறி இவள் வீட்டிற்கு சென்று வீட்டிலுள்ள செம்பு, ஈயம், பித்தளை பாத்திரங்களை இரவில் நெருப்பிலிட்டால் பொன்னாக மாறும் என கூறினார். பொன்னனையாளும் அவ்வாறே செய்ய அவை பொன்னாக மாறின. அந்த பொன்னைக் கொண்டு சிலையை உருவாக்கினாள். சிலையின் அழகில் சொக்கி, அதன் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டாள். அவள் பதித்த நகக்குறி இன்றும் இங்குள்ள உற்சவரிடம் காணப்படுகிறது. இங்கு அம்பாள் சவுந்தரநாயகியுடன் சுவாமி அருள்பாலிக்கிறார். இவளுக்கு மின்னணையாள் என்ற பெயரும் உண்டு. மதுரை மீனாட்சியைப் போல சுவாமிக்கு வலப்பக்கத்தில் அம்மன் இருப்பதால், அவளுக்கு இங்கு முக்கியத்துவம்.
 தல வரலாறு: தர்மயக்ஞன் என்பவன் தன் தந்தையின் அஸ்தியை காசியில் இருந்து ராமேஸ்வரம் கொண்டு சென்றான். அவனுடன் உறவினன் ஒருவனும் சென்றான். வரும் வழியில், இத்தலத்தில் சற்று ஓய்வு எடுத்தனர். சற்று நேரம் கழித்து கிளம்பிய போது, உடன் வந்த உறவினன் கலசத்தைத் திறந்து பார்த்தான். உள்ளிருந்த அஸ்தி புஷ்பமாக (பூ) மாறியிருந்தது. தான் பார்த்த இந்த காட்சியை தர்மயக்ஞனிடம் அப்போது அவன் கூறவில்லை. ராமேஸ்வரம் சென்று கடலில் அஸ்தியை கரைக்க கலசத்தை திறந்த போது பூக்கள் அஸ்தியாக மாறியிருந்தன. அதிர்ச்சியடைந்த உறவினன், தான் பார்த்த காட்சியை தர்மயக்ஞனிடம் சொல்ல, அஸ்தியை அங்கே கரைக்காமல், மறுபடியும் திருப்புவனத்திற்கு வந்தனர். அங்கு வந்து பார்த்த போது கலசத்தில் இருந்த அஸ்தி புஷ்பமாக மாறி இருந்தது.
காசியிலும், ராமேஸ்வரத்திலும் அஸ்தியாக இருந்தது இங்கு புஷ்பமாக இருந்ததால் காசி நகரத்தை விட 16 மடங்கு புண்ணியம் தரும் இடமாக இத்தலம் போற்றப்படுகிறது. இதை ‘காசிக்கு வீசம் அதிகம்’ எனும் சமயப்பெரியோர் கூற்றிலிருந்து அறியலாம். காசிக்கு செல்ல முடியாதவர் இங்குள்ள வைகையில் அஸ்தியை கரைத்து மோட்ச தீபம் போடும் வழக்கம் இன்றளவும் நடந்து வருகிறது. இங்கு அஸ்தி கரைத்தாலோ, பிதுர்தோஷ வழிபாடுகள், தர்ப்பணம் செய்தாலோ முன்னோர் செய்த பாவம் நீங்கி அவர்களும் நற்கதியடைவதுடன், அந்தக் குடும்பங்களும் நன்றாக இருக்கும் என்பது நம்பிக்கை.
வழி விட்ட நந்தி: இத்தல இறைவனை சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் நால்வரும் பாடியுள்ளனர். சம்பந்தர், திருப்புவனத்திற்கு வந்த போது ஆற்று மணல் சிவலிங்கமாக காட்சியளித்தது. அதன் மீது கால் வைக்க அஞ்சிய சம்பந்தர், வைகையாற்றின் மறுகரையில் நின்றபடியே சிவனை பாடினார். அப்போது நந்தி லிங்கத்தை மறைத்திருந்தது. சம்பந்தர் சிவனை வேண்ட, சம்பந்தருக்காக நந்தியை சற்று விலகி தன்னை மறைக்காமல் இருக்கும்படி சிவன் கேட்டு கொண்டார். அதன்படி, இங்கு நந்தி சற்று விலகி இருப்பது சிறப்பு.
சிறப்பம்சம்: ஐந்து நிலை கோபுரம் கொண்ட இங்கு, சுவாமி சுயம்புலிங்கமாய், ருத்ராட்ச மேனியாய் காட்சியளிக்கிறார். லிங்கத்தில் திரிசூல முத்திரையும் உள்ளது. இங்கு 5 தீர்த்தங்கள் உள்ளன. இதில், வைகையிலுள்ள மணி கர்ணிகை தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்கு ஸ்நானம் செய்தபடியால் அகஸ்திய முனிவர் கடல் நீரை பருகும் சக்தி பெற்றார். நளன், பிரம்மா, விஷ்ணு, சூரியன், மகாலட்சுமி, அகத்தியர், கவுதம முனிவர், கோரக்கசித்தர் வந்து இறைவனை பூஜித்து நற்பலன் பெற்ற தலம் என்று தலபுராணம் கூறுகிறது.
திருவிழா: வைகாசி விசாகம், ஆடி முளைக்கொட்டு உற்சவம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கோலாட்ட திருவிழா, கார்த்திகை தீபம், மார்கழி ஆருத்ரா தரிசனம், மாசி சிவராத்திரி, பங்குனி பிரம்மோற்சவம்.
திறக்கும் நேரம் : காலை 6- – 11 மணி,
மாலை 4- -– இரவு 8.
இருப்பிடம் : மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரோட்டில் 18 கி.மீ.,

கருத்துகள் இல்லை: