சனி கிரகத்தின் மிகப்பெரிய நிலவான டைட்டான்.
சனி கிரகத்தின் மிகப்பெரிய நிலவான ‘டைட்டானில்’ ஏரிகள் இருப்பது தெரிய
வந்துள்ளது. நாசா - ஐரோப்பிய விண்வெளி கழகம் நடத்தி வரும் ஆய்வில்
இத்தகவல் தெரியவந்துள்ளது.
பூமியை தவிர வேறு கிரகங்களில் உயிர்கள் உள்ள னவா, உயிர் வாழ சாத்திய
கூறுகள் உள்ளனவா, வேற்றுகிரக மனிதர்கள் உள்ளனரா என்பன போன்ற தகவல்களை
உறுதிப்படுத்த பல நாடுகள் தீவிர ஆராய்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
சனி கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா,
‘கேசினி’ என்ற விண்கலத்தை அனுப்பி உள்ளது. அது சனி கிரகத்தை சுற்றி வந்து
தகவல்களை அனுப்பி வருகிறது.
பூமிக்கு நிலவு உள்ளதுபோல் சனி கிரகத்துக்கும் பல நிலவுகள் உள்ளன.
அவற்றில் மிகப் பெரியது ‘டைட்டான்’ நிலவு. இந்த ‘டைட்டான்’ நிலவில்
பூமியில் உள்ளது போலவே நில அமைப்பு, கடல், ஏரிகள் இருந்துள்ளது தெரிய
வந்துள்ளது. நாசா - ஐரோப்பிய விண்வெளி கழகம் (இஎஸ்ஏ) ஆகியவை இணைந்து
டைட்டானுக்கு கேசினி -ஹூஜென் என்ற ரோபோவை தரையிறக்கி ஆய்வு செய்து
வருகின்றன. அந்த ரோபோ அனுப்பியுள்ள பல தகவல்களில், டைட்டான் நிலவில்
ஏரிகள் இருந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இஎஸ்ஏ.வின் ஆராய்ச்சியாளர் தாமஸ் கார்ஜெட் கூறுகையில்,
‘‘டைட்டான் நிலவில் தண்ணீரால் நில அரிப்பு ஏற்படுவதையும் பூமியில் நில
அரிப்பு ஏற்படுவதையும் ஒப்பிட்டு பார்த்து வருகிறோம். இதில் பூமியைவிட
டைட்டானில் 30 மடங்கு மெதுவாக தண்ணீரில் கரைதல் நடைபெறுகிறது. டைட்டானில்
ஓராண்டு என்பது மிக நீண்ட காலமாக இருப்பதால் அங்கு கரைதல் மெதுவாக
நடைபெறுகிறது. மேலும், சுண்ணாம்புக்கல், ஜிப்ஸம் ஆகிய தண்ணீரில் கரைய கூடிய
பாறைகள் மழை மற்றும் தண்ணீரால் அரிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன’’
என்றார்.
கேசினி திட்ட விஞ்ஞானி நிகோலஸ் கூறுகையில், ‘‘பூமியின் நில அமைப்பை,
டைட்டான் நிலவின் நில அமைப்புடன் ஒப்பிட்டு ஆராய்ச்சி மேற்கொண்டு
வருகிறோம். இரண்டிலும் நில அமைப்பு உருவான விதத்தில் சில ஒற்றுமைகள்
காணப்படுகின்றன. தொடர்ந்து ஆராய்ச்சி நடக்கிறது’’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக