திங்கள், 26 செப்டம்பர், 2016

முப்படிவம் (திரிமூர்த்தம்)

முப்படிவம் (திரிமூர்த்தம்)
மாந்தர்க்கு முதலாவது இறப்பச்சம்பற்றி அழிவுணர்ச்சியும் பின்பு காப்புணர்ச்சியும், அதன்பின் படைப்புணர்ச்சியும் தோன்றுவதே இயல்பு. முதலாவது சிவனுக்கு அழிப்புத் தொழிலும் பின்பு திருமாலுக்குக் காப்புத்தொழிலும் கூறப்பட்டன. பின்பு படைப்புணர்ச்சி தோன்றியபோது, அதுவும் சிவனுக்கே யுரித்தாக்கப்பட்டது, ஒடுங்கின இடத்திலிருந்தே ஒன்று தோன்றவேண்டும் என்னும் கருத்துப்பற்றி.
இதே,
“தோற்றிய திதியே யொடுங்கிமலத் துளதா
மந்த மாதி யென்மனார் புலவர்”
என்று சிவஞான போதத்திற் கூறப்படுகின்றது.
பிராமணர் தென்னாட்டிற்கு வந்தபின், படைப்புத் தொழிலைப் பிரித்துத் தங்கள் குலமுதல்வராய பிரமாவினது என்று கூறிப் பழைமை வரைந்தனர். ஆயினும் தமிழர் ஒப்புக் கொள்ளாமையால் அவருக்குக் கோயில்வழிபாடேற்படவில்லை. இதற்குப் பிற்காலத்தில் ஒரு கதை கட்டப்பட்டது.
பிராமணரின் குலமுதல்வரே பிரமாவென்பது, பிரமஸ்ரீ, பிரமதாயம் என்னும் பிராமணரைக் குறித்த சொல்வழக்குகளாலும், வீரமகேந்திரத்திலிருந்த பிரமா கந்தனொடு போய்ச் சேர்ந்து கொண்டமையால், அடுத்த அண்டத்திலிருந்த பிரமாவைச் சூரபன்மன் வரவழைத்தான் என்னுங் கந்தபுராணச் செய்தியாலும் உணரப்படும்.
திருமால் முகில்வடிவின ராதலின், மேகத்தைச் சமுத்திர மென்னும் தங்கள் மறைவழக்குப்படி, கடலை அவர்க்கு இடமாக்கினர் ஆரியர். திருமால் வணக்கம் வர வரச் சிறந்து வந்தமையால், பிரமா திருமாலின் மகனெனப் பட்டார் போலும். ஆரிய மறையோதுவதே சிறந்த கல்வி என்னுங் கருத்தில், கலைமகள் (சரஸ்வதி) பிரமாவின் மனைவியாகக் கூறப்பட்டாள். தமிழர் கல்வியைத் தமிழ்மாது என மொழிப்பெயராற் கூறினரே யன்றிக் கலைப்பெயராற் கூறவில்லை, ஆரியம் வருமுன் தமிழொன்றே தமிழகத்தில் வழங்கினமையின்.
பண்டைக்காலத்தில் ஒவ்வோர் அரசனிடத்தும், ஒவ்வொரு கருமான் அல்லது தச்சன் இருந்தான். அவனே ஊர்களை அல்லது நகர்களைக் கட்டுபவனாதலின், 'உலகக் கருமான்' (விசுவகர்மா) எனப்பட்டான். 'உலக விடைகழி' என்பதில் உலகம் நகரைக் குறித்தலையும், கருமான் என்பது கொல்லன் பெயராதலையுங் காண்க. விசுவகர்மா என்பது உலகக் கருமான் என்பதின் மொழிபெயர்ப்பே.
உலகக் கருமானுக்கு அரசத் தச்சன் என்றும் பெயருண்டு. ஒ.நோ: Gk. architekton - archi, chief, and tekton, a builder, E. architect.
ஊரைக் கட்டுவது தச்சனாதலாலும், கொல்லருக்குள் கருமான், தச்சன், கற்றச்சன், கன்னான், பொற்கொல்லன் என ஐம்பிரிவிருப்பதாலும். உலகத்தைப் படைத்தவன் முதற் கருமான் என்றும், அவன் ஐம்முகன் என்றும் ஒரு பழைமை வழக்கு தொன்றுதொட்டுக் கம்மாளர்க்குள் வழங்கி வந்திருக்கின்றது.
பிராமணர் தம் குலமுதல்வராகிய பிரமனைப் படைப்புத் தெய்வமென்றும் நான்முகனென்றும் கூறியபோது, கம்மாளர்க்கு அவர்மீது பகையுண்டானதாகத் தெரிகின்றது. அதுவே இன்றும் தொடர்ந்து வருகின்றது. ஆரிய மறையை நான்காகப் பகுத்தது பிற்காலமாதலின், பிரமாவை நான்முகன் என்றது திசைபற்றி அல்லது குலப்பிரிவுபற்றியே யிருத்தல் வேண்டும்.
மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்.

கருத்துகள் இல்லை: